ரஜினியின் ‘தலைவர் 170’ படத்தை இயக்கவுள்ள ஜெய் பீம் இயக்குநர் – வெளிவந்த மாஸ் அப்டேட்!

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள ‘தலைவர் 170’ திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது…

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள ‘தலைவர் 170’ திரைப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கிஷெரப் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலரும் நடித்து வருவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. தற்போது ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் 70 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ”லால் சலாம்” படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதே நேரத்தில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, எச்.வினோத், த.செ.ஞானவேல் உள்ளிட்ட பலரிடமும் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து ரஜினி ரசிகர்களையும் குதூகலப்படுத்தும் விதமாக ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. லைகா நிறுவனத் தலைவர்
சுபாஸ்கரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதனை முன்னிட்டு ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ரஜினியின் 170வது படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தற்காலிகமாக ”தலைவர் 170” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், இப்படம் அடுத்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ”ரஜினியின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அதன்படி அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும்கொண்டாட்டத்திற்குத் தயாராவோம்” என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, ‘ஜெய் பீம்’ படம் போலவே ‘தலைவர் 170’ படமும் ஏதேனும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்போடு, ரஜினியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பை திரையில் பார்க்க காத்திருக்கின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.