கைதி-2 குறித்த புதிய அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் வழங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான திரைப்படம் கைதி. இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இன்றுடன் கைதி வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
“எல்லாம் இங்கிருந்து தான் தொடங்கியது. கார்த்தி மற்றும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. இவர்களால் தான் ‘லோகேஷ் யுனிவர்ஸ்’ சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம், கூலி திரைப்படத்துக்கு பிறகு கார்த்தியின் கைதி-2ஐ லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதிப் படத்தை தொடர்ந்து விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற வெற்றிப் படங்களை லோகேஷ் கனகராஜ் எடுத்தார். தற்போது லோகேஷ் ரஜினியை வைத்து ‘கூலி’ படத்தை எடுத்து வருகிறார். கார்த்தியும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கூலியைத் தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







