சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால் ஆபாசப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
5 லட்சம் பரிசு வந்திருப்பதாக வந்த எஸ்எம்எஸ் லிங்க்-ஐ தொட்டதும் அப்ளிகேஷன் தானாகவே பதிவிறக்கமானதுடன் என் செல்போனும் ஹேக் செய்யப்பட்டது. மர்மநபர்கள் போன் செய்து நான் கடன்வாங்கியதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டுவதாகக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தில்லாலங்கடி படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இவர் “சரவணன் மீனாட்சி” தொடர்மூலம் மிகவும் பிரபலமானவர். அறிந்தும் அறியாமலும், 555 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்ட்ரக்ராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் “சிலர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் ஆபாசப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும்” கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் லட்சுமி வாசுதேவன் கூறும்போது, “கடந்த 11-ம் தேதி எனது செல்போனில் வந்த எஸ்எம்எஸ்-ல் எனக்கு 5 லட்சம் ரூபாய் விழுந்திருப்பதாகவும், அந்த பணத்தை பெற எஸ்எம்எஸ்-ல் வந்துள்ள லிங்க்-ஐ தொடவேண்டும் எனவும் கூறி இருந்தது. நானும் என்ன பரிசு விழுந்துள்ளது என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் லிங்க்-ஐ தொட்டதும் ஒரு அப்ளிகேஷன் தானகவே எனது செல்போனில் பதிவிறக்கமானது. சிலநிமிடங்களில் எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஸ்க்ரீனில் வந்தபிறகே நான் ஏமாந்துவிட்டது தெரிந்தது.
இதன்பின்னர் இரண்டு நாட்கள் கழித்து எனது செல்போனில் பேசிய மர்மநபர் ரூ.5,000 கடனாக நான் வங்கியிருப்பதாகவும், அதை உடனே திருப்பி செலுத்துங்கள் எனவும் மிரட்டும் தொனியில் பேசினார். இதைக்கேட்டு எனக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை என கூறினேன்.
உடனே அந்த மர்ம நபர், எங்கள் லிங்க் மூலம் நீங்கள் கடன்பெற்றிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 5 ஆயிரம் பணத்தை நாங்கள் குறிப்பிட்டுள்ள லிங்க் மூலம் செலுத்துங்கள் என மிரட்டினார். இதன்பின்னர் வெவ்வேறு செல்போன் எண்களிலிருந்து எனது செல்போனில் தொடர்புகொணட மர்ம நபர்கள் என்னை மிரட்டத் தொடங்கினர். இதனால் பயந்துபோய் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தேன்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் எனது செல்போனை ஹேக்செய்து எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசப்படங்களாக மாற்றி எனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டனர். எனது பெற்றோருக்கும் அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி உள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உறவினர்கள் என்னைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். பரிசப்பணம் விழுந்ததாக வந்த எஸ்எம்எஸ்-ஐ நம்பி லிங்க்-ஐ தொடப்போய் இன்று மிகவும் இக்கட்டான மனநிலையில் தவிக்கிறேன். தயவுசெய்து இதுபோன்ற லோன் அப்ப்ளிகேஷனை திறந்துபார்க்கவோ, லிங்க்-ஐ தொடவோ வேண்டாம்” எனக் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபோன்ற போலியான அப்ப்ளிகேஷன்களை தேவை இல்லாமல் டவுன்லோடு செய்யவோ, லிங்குகளை தொடவோ வேண்டாம் என காவல்துறையினரும். சைபர் கிரைம் போலீசாரும் எச்சரித்துள்ளனர். இதைமீறி தேவரை இல்லாத பிரச்சினையில் சிக்கிக்கொண்டாலும் உடனே காவல்துறையில் புகார் செய்துவிடுங்கள். பேர் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து மிரட்டல் பேர்வழிகளின் சொல்படி கேட்கத்தொடங்கினால் அதைப் பயன்படுத்தி உங்களிடம் இருந்து பல லட்சத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.







