ராஜேந்திர பாலாஜி கொலையா செய்தார்? ஏன் அவரை கைது செய்ததில் காவல்துறை இவ்வளவு அவசரம் காட்டுகிறது என விழுப்புரம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், இன்பதுரை, தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் ஆளுநரை சந்தித்து தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.வி.சண்முகம், “தமிழக அரசு செய்யக்கூடிய தவறை சுட்டி காண்பிக்கக்கூடிய நபர்கள் மீது தமிழக காவல்துறை அவர்களை கைது செய்து அவர்களின் தொண்டர் படையாக மாறி பொய் வழக்கை போடுகின்றனர்”. என்று குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
“எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஆள் கடத்தலில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இன்னொரு புறம் தமிழக அரசு கொடுக்கும் மன அழுத்தத்தில், பல காவல்துறை அதிகாரிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
இப்படி தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆளுநரிடம் எடுத்துக்கூறி உள்ளோம். காவல்துறையின் நுரையீரல் அழுகி போய் உள்ளது. அம்மா அரசு யார் மீதும் இது போல வழக்கு தொடுத்தது இல்லை.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது. ராஜேந்திர பாலாஜி கொலையா செய்தார்? அவரை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறது தமிழக அரசு. ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு தற்பொழுது உள்ள செந்தில் பாலாஜி மீதும் உள்ள வழக்கு ஒன்றுதான்.
உங்களால் செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமா ? எங்கள் ஆட்சியில் நாங்கள் கைது செய்தோமா ? சட்டப்படி அவர் மீது வழக்கு தொடுத்து விசாரணை நடத்தினோம். ராஜேந்திர பாலாஜி மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரின் உறவினர் மீதோ, அல்லது, குடும்பத்தினர் மீதோ வன்முறை இருக்ககூடாது.
தமிழகத்தில் கஞ்சா போதை குற்றங்கள் அதிகமாகி உள்ளது. பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை அதிகமாகி வருகிறது.” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.








