ருத்ர தாண்டவம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள படம் பகாசூரன். பெரிய எதிர்ப்பார்ப்பு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி நடராஜ், ராதா ரவி, கே.ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் குறியீடுகளும், அதற்கு கிடைத்த விமர்சனங்களும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. மீண்டும் ஒரு அரசியல் சார்ந்த கதையை தான் இயக்குநர் மோகன் எடுத்திருப்பார் என நினைத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்றால் கேள்வி குறிதான்.
முழுவதும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இந்த உலகில் செல்போன் என்ற சாதனம் இப்போது இல்லை என்றால் என்னவாகும் ? இப்படி ஒரு கேள்வியை இந்த தலைமுறை இளைஞர்களிடம் கேட்டால் பதில் சொல்ல கூட தயங்குவார்கள். அப்படி அத்யவசியமாக மாறியுள்ள செல்போன்களாலும் அதில் இருக்கும் சில செயலிகளாலும் ஏற்படும் பாதிப்புகளை பகாசூரன் திரைப்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மோகன்ஜி.
முன்னாள் ராணுவ அதிகாரியான நட்டி நட்ராஜ் யூடியூப் சேனல் மூலம் சமூகத்தில் நடக்கும் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் வீடியோக்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். திடீரென அவரது அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வர பதட்டத்திலேயே சம்பவ இடத்திற்கு செல்கிறார். தனது அண்ணன் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த அவர் காவல்துறை உதவியுடன் தானே அதனை விசாரிக்கவும் செய்கிறார். இது ஒரு புறம் இருக்க சிவ பக்தரான செல்வராகவன் வெறிக்கொண்டு பலரை கொலை செய்து வருகிறார். நட்ராஜ்ஜின் அண்ணன் மகள் தற்கொலைக்கும் சிவ பக்தரான செல்வராகவனுக்கும் இடையே என்ன தொடர்பு ? செல்வராகவன் எதற்காக இத்தனை கொலை செய்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பதே பகாசூரன் படத்தின் கதை.
சாணிகாயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் கை தட்டல்களை பெற்ற செல்வராகவன் தனக்கு இயக்கம் மட்டுமல்ல நடிப்பும் தெரியும் என்பதை முன்பே நிரூபித்திருப்பார். அது போலவே பீமராசு என்னும் கதாப்பாத்திரத்தில் இந்த படத்திலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆக்ஷன், எமோஷன் என தன்னால் முடிந்ததை வெளிப்படுத்தியும் உள்ளார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை என்பதை மறுக்க முடியாது. பீஸ்ட் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் பெரிய அளவில் பேசப்பட்ட செல்வராகவன், இந்த படம் முழுவதும் வந்தாலும் நமக்கு சற்று அந்நியமாகவே படுகிறார். பல காட்சிகள் ஆர்டிபிஷியலாக நடித்திருப்பதை போன்றே உணர்த்துகிறது.
முன்னாள் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள நட்டி நட்ராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். ஆனால் அவரது வழக்கமான வில்லத்தனம் இதில் இல்லை. இவர்களை தவிர ராதாரவி, கே.ராஜன், கூல் சுரேஷ் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.
சாம் சி எஸ்சின் பின்னணி இசை படத்திற்கு பெரிதும் பலமாக இருந்தாலும் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. என்னப்பன் அல்லவா பாடல் சிறப்பாக இருந்தது ஆனால் மற்ற பாடல்கள் சொல்லும்படி இல்லை. ஃபருக் பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துவதோடு மோகன்.ஜியின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக ஒரு படி முன்னே சென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
படத்தின் முதல்பாதி சற்று விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி பல்வேறு லாஜிக் மீறல்களால் தனது வேகத்தை இழக்கிறது. இரண்டு மாணவிகளின் மரணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த கதையில் அந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும் உண்மைகளை அழுத்தமாக சொல்லவில்லைவோ என்ற உணர்வு தோன்றுகிறது. குறிப்பாக செல்போன்கள் மூலமாக மாணவிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக தொடங்கி வேறு ஒரு கதைக்கு எடுத்து சென்றது ஒரு முழுமையான தீர்வு கிடைக்காமல் போனது போலவே உணர்த்துகிறது. அதே நேரத்தில் சில நபரின் பெயர், ஊர் பெயர், தோற்றம் என இதற்கு முந்தைய படங்களை போலவே சில குறியீடுகளை வைத்து படமாக்கியிருக்கிறார் மோகன்.ஜி. திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்கள் விமர்சனத்தில் சிக்கினாலும் திரைக்கதை சற்று வலுவாக இருந்ததால் பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் இப்படம் பாராட்டுகளை குவிக்குமா என்று கேட்டால் சற்று சந்தேகம் தான்.
அதே நேரத்தில் விண்வெளியை தாண்டி பெண்கள் சாதனை படைத்துவரும் நிலையில் மீண்டும் பெண்களை கண்காணிக்கவும், பிற்போக்குத்தனமாக சிந்திக்கவும் வைக்கும் வகையில் சில காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பது ஏற்புடையதாக இல்லை…..
–தினேஷ் உதய்…










