தோனியின் ட்விட்டர் பக்கத்தில் அதிரடி மாற்றம்: ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான Blue Tick குறீயீட்டை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான Blue Tick குறீயீட்டை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிக சிலர் மட்டுமே உலக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளனர். அதில் முதல் இடத்தில் மகேந்திர சிங் தோனிக்கே இடமுண்டு எனக் கூறலாம். இவரது ஆட்டத்தையும், தலைமை பண்பையும், இக்கட்டான சூழலில் கூட கூலாக எடுக்கும் முடிவுகளையும் பாராட்டாத கிரிக்கெட் ஜாம்பவான்கள் இல்லை என்றே கூறும் அளவிற்கு திறமையானவர் தோனி. ஐசிசி நடத்தும் அனைத்து தர தொடர்களிலும் இந்தியாவிற்கு கோப்பை வென்று கொண்டுத்து சாதனை படைத்துள்ளார் தோனி. 2019ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார், அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இந்தியாவால் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியவில்லை. அந்த போட்டிக்கு பிறகு தோனிக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இரவு 7:29 மணிக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சமூக வலைதள பக்கங்களின் மூலம் அறிவித்தார் தோனி.

2019 உலக கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆன தோனி

தோனிக்கு ஆடுகளத்தில் மட்டும் அல்ல, சமூக வலைதள பக்கங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக ஃபேஸ்புக்கில் 2.6 கோடி பேர் தோனியை பின்பற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டகிராமில் 3.45 கோடி பேரும், ட்விட்டரில் 80.3 லட்சம் பேரும் பின்பற்றுகின்றனர். தோனி சமூக வலைதளத்தில் ஏதேனும் கருத்து கூறினாலோ, புகைப்படத்தை பதிவிட்டாலோ அல்லது அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வேறு யாராவது பதிவிட்டாலும் அது வைரலாக பரவுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அவர் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு பிறகு ட்விட்டர் மற்றும் இன்ஸ்ட்கிராம் பக்கங்களில் எந்த பதிவும் இடவில்லை. இந்நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து புளூ டிக் (Blue Tick) நீக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும், சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் சமூக வலைதள நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை குறிப்பதற்காக புளூ டிக் குறியீடை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள புளூ டிக் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புளூ டிக் நீக்கப்பட்ட தோனியின் ட்விட்டர் பக்கம்

ஏற்கெனவே கடந்த மாதம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் புளூ டிக் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆறு மாதங்களாக பயன்பாட்டில் இல்லாததால் புளூ டிக் நீக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. தோனியின் ட்விட்டர் பக்கத்திலும் கடந்த ஆறு மாதமாக எந்த பதிவும் செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் புளூ டிக் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் புளூ டிக் நீக்கப்பட்டதற்காக காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.