சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் கதை 1980களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் தனுஷ், சமீபத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு ’ராயன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இவர் அடுத்ததாக தன்னுடைய 51-வது படத்திற்காக, ஆந்திராவை சேர்ந்த இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த D51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் பங்கு பெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவ்வப்போது சில அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
முதலில் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. மேலும், நாகர்ஜூனா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நேற்று, நாகர்ஜூனா நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில், இப்படம் 1980-களில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் பின்னணியில் உருவாகும் படமாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.







