“மஞ்சும்மல் பாய்ஸ்” மூலம் மீண்டும் குணா குகை | அவ்வளவு ஆபத்தானதா?

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான  “குணா குகை” மஞ்சும்மாள் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலை,  பள்ளத்தாக்குகள் மற்றும் ஏரிகள் நிறைந்த அழகான இடம்.  மலைகளின்…

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான  “குணா குகை” மஞ்சும்மாள் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலை,  பள்ளத்தாக்குகள் மற்றும் ஏரிகள் நிறைந்த அழகான இடம்.  மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும்.  கோடைக் காலத்திலும் குளிரும் மூடுபனியும்,  கொடைக்கானலின் காட்சிகள் எந்தப் பயண ஆர்வலர்களையும் ஈர்க்கும்.
கொடைக்கானலுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க விரும்பும் இடம் குணா குகை.  ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக  குணா குகை தற்போது மூடப்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி இல்லை.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குணா குகையை பற்றி சிதம்பரம் இயக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் வைரலாகி வருகிறது.  கொடைக்கானலில் உள்ள குணா குகையை பார்வையிட கொச்சியில் உள்ள மஞ்சும்மலில் இருந்து வரும் இளைஞர்கள் குழுவின் கதையை மஞ்சும்மல் பாய்ஸ் சொல்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் வெளியான பின் குணா குகை சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாக மாறியது. குணா குகை அல்லது டெவில்ஸ் கிச்சன் என்று அந்த பகுதி அழைக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் குகைக்கு டெவில்ஸ் கிச்சன் அதாவது பிசாசின் சமையலறை என்று பெயரிட்டனர்.  இந்த இடம் 1821 ஆம் ஆண்டு பிஎஸ் வார்டு என்ற ஆங்கிலேய அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த குகை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2230 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கண்மணி அனபோடு காதலன்…
குணா திரைப்படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ என்ற எவர்கிரீன் பாடலை இந்த குகையில் படமாக்கிய போது இந்த குகைக்கு குணா குகை என்று பெயர் வந்தது.  1992ல் குணா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ‘கண்மணி அன்போடு’ பாடல் ஹிட்டானதும்,  குணா குகை முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியது.
இது தூண் பாறைகள் என்று அழைக்கப்படும் மூன்று பெரிய பாறைகளுக்கு இடையில் அமைந்துள்ள குகைகளின் குழுவாகும். பலர் விழுந்து மரணித்து இந்த குணா குகையின் ஆழம் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.  பல நூற்றாண்டுகள் பழமையான குணா குகை சுமார் 600 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள்படி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.  ஆனால் அதிக இறப்புகள் இங்கு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பண்டைய காலங்களில் மக்கள் இந்த இருண்ட மற்றும் திகிலூட்டும் குகைக்குள் இறங்கினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பல தற்கொலைகளின் விளைவாக, குணா குகைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  தற்போது குகையை தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.  சுமார் பத்து ஆண்டுகளாக குணா குகைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
குகைக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளிடம் இருந்து வருகிறது.  இருந்தாலும்,  அதிகாரிகள்  இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
குகைக்குள் எந்நேரமும் கடும் இருள் சூழ்ந்திருக்கும் என்பதால்,  விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  எனவே, ஏற்பாடுகள் ஏதுமின்றி, திடீரென முடிவு எடுக்கக் கூடாது என, அதிகாரிகள் கருதுகின்றனர்.
மஞ்சும்மல் பாய்ஸ்:
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர்,  குணா குகையில் சிக்கிக் கொள்கிறார்.  அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. சி தம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதால் இங்கும் நன்றாக ஓடுகிறது.
படத்தில் இடம் பெறும் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்தப் படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் படக்குழுவைப் பாராட்டி வருகின்றனர்.

சந்தான பாரதி இயக்கிய குணா படத்தை மிக சிறப்பான முறையில் ஒரு ரெஃபரன்ஸாக இப்படத்தில் இயக்குநர் சிதம்பரம் பயன்படுத்தி இருக்கிறார்.  ஒருவகையில் இப்படம் கமல்ஹாசனின் குணா படத்திற்கு புகழாரம் சூட்டுவது போல் அமைந்துள்ளது.  இப்படியான நிலையில் மஞ்சும்மெல் படத்தின் இயக்குநர் சிதம்பரம் நேர்காணல் ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/kamalsivayouth/status/1761838819865964892?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1761838819865964892%7Ctwgr%5E4cd83173a38c01c8fc67e462d0b2ef5cc404eeec%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews7tamil.live%2Fi-shot-manjummal-boys-to-meet-kamal-haasan-in-person-director-chidambaram.html

இந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் சிதம்பரம் “நான் ஒரு மிகப்பெரிய கமல் ரசிகன். கமலின் விருமாண்டி படம் எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. அவர் வெறும் ஒரு நடிகர் மட்டுமில்லை.  கமல் சினிமாவுக்காகவே பிறந்தவர்.  ஐந்து வயதில் இருந்து சினிமாவில் இருப்பதால் அவரது 30 வயதை நெருங்கும்போதே ஒரு மாஸ்டராக மாறிவிட்டார்.  இன்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன.  இந்த எல்லா வசதிகள் இருந்து நாங்கள் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.  ஆனால் 30 வருஷத்திற்கு முன்னாடியே எந்த வித தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் ஒரு படத்தையே அந்த குகையில் எடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது “ என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் இயக்குநர் சிதம்பரம். கமல்ஹாசனை நேரில் சந்திக்கலாம் அவரது கவனத்தை பெறலாம் என்பதற்காகவே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தை எடுக்க முக்கியக் காரணம் எனத் தனது சமீபத்திய பேட்டியில் சிதம்பரம் சொல்லியிருந்தார்.

அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது.  ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரை கமல்ஹாசன் மற்றும் சந்தானபாரதி சந்தித்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் தமிழ்நாட்டிலும் வசூல் குவித்துவருகிறது.  இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது, “கடந்த வாரமும் இந்த வாரமும் வெளியான எந்த தமிழ்ப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால்,  மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு தற்போது  30 ஸ்கிரீன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழில் வசூல் குவித்து வருகிறது” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.