உத்தர பிரதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி லக்னௌவில் உள்ள அவரது நினைவகத்தின் பூட்டிய வாயிற்கதவில் ஏறி குதித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தினார்.
லக்னௌவில் ‘ஜெயப்பிரகாஷ் நாராயண் சா்வதேச மையம் (ஜெபிஎன்ஐசி)’ கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள அவரின் சிலைக்கு, அவரது பிறந்த நாளில் சமாஜவாதி சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு ஜெபிஎன்ஐசி வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், பூட்டிய வாயிற்கதவில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்து, ஜெ.பி.நாராயண் சிலைக்கு அகிலேஷ் மரியாதை செலுத்தினார். காவல் துறையின் தடைகளை மீறி அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் உள்ளே நுழையும் காட்சி பதிவாகியுள்ள விடியோவைப் சமாஜவாதி கட்சி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், ”மாநில பாஜக அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிரான சமாஜவாதி தொண்டர்களின் போராட்டம் தொடரும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : செங்கல்பட்டில் A+ ரவுடி மீது துப்பாக்கி சூடு!
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், ”ஜெ.பி.நாராயணுக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு பூட்டிய வாயிற்கதவில் ஏறிக் குதித்து மரியாதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஜெ.பி.நாராயணுக்கு மரியாதை செலுத்துவதை தடுப்பது யார் என மக்கள் அறிவர். ஜனநாயகத்தில் அரசுக்கு எதிராக குரலெழுப்ப மக்களை ஊக்கப்படுத்திய தலைவருக்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்தை மூடி அரசின் தோல்விகளை மறைக்க பாஜக முயற்சிக்கிறது’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!







