தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்களை தற்போது காணலாம்…
கூட்டணி குறித்து திமுகவுடன் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு இல்லை. தொகுதிக்கு ஒரு புகார் பெட்டி வைப்போம். அந்த புகார்கள் மீது உடனடியாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் புகார் பெட்டி உள்ளதா?. திமுக தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதி வேறு. தற்போது நிறைவேற்றும் வாக்குறுதிகள் வேறாக உள்ளது.
நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் பாதுகாப்பு வேண்டி தேமுதிக அலுவலகம் வந்தார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகம் உள்ளது. இதை தடுக்க வேண்டிய அரசே குவாரிகள் எடுத்து நடத்துகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் லாரிகள் மணல் கடத்தப்படுகிறது. நமக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய கர்நாடகம் ஏமாற்றிவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவுக்கு ரெய்டு வரும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு ரெய்டு வரும் இது ஆண்டு ஆண்டாக நடந்து வருகிறது. முதலமைச்சர் எப்போதும் தமிழக ஆளுநரை குறை சொல்கிறார். ஆளுநர் அவரின் வேலையை செய்கிறார். அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பது குறித்த கேள்வி எழுப்பியுள்ளீர்கள். லஞ்ச ஊழலில் கைது செய்யப்பட்டவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
நாங்கள் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லாததால் டெல்லி பாஜக கூட்டணி கட்சிகளின் NDA கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை. தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது. மக்களின் நிலை மாறவில்லை . ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா







