எத்தனை வழக்குப் போட்டாலும் தேமுதிகவை அசைக்க முடியாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 2014 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக அதிமுக நகரச் செயலாளர் சையத்புடான்சா தொடர்ந்த வழக்கில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் இறுதிக் கட்ட விசாரணைக்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆஜரானார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2014-ல் தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதை அறிந்த நீதிபதி தற்போது விடுதலை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது அனைத்தும் செய்தியாளர்களுக்கும் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்தும் பொதுமக்களைக் கைது செய்வதை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை இந்த பாதிப்புக்குள்ளாக்கியவர்களை உடனடியாக கைது செய்து அவர்களது பெற்றோர்களுக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிக்கு எப்படி இந்த சம்பவம் நடைபெற்றது எனவும் கேள்வி எழுப்பினார். அப்போது, அந்தப் பெண்ணின் உடலில் ரத்தக் கசிவு மட்டுமே உள்ளதாகவும் எந்த இடத்திலும் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பள்ளி குழந்தை இறந்திருந்தால் அந்த குழந்தையின் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்த அவர், இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றிப் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறினார். மேலும், எத்தனை வழக்குப் போட்டாலும் தேமுதிகவை அசைக்க முடியாது எனத் தெரிவித்தார்.








