ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது,
“ஈவிகேஎஸ் இளங்கோவன் அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர். அவர் எதையும் வெளிப்படையாக பேசுபவர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸுக்கு பேரிழப்பு. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு”
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.







