காற்று மாசால் டெல்லி மூச்சுத்திணறி வரும் நிலையில் இன்றைக்கான காற்றின் தரக்குறியீட்டின் எண் 232 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனாவை விடக் கொடியதாக இருந்து வருகிறது டெல்லியில் உள்ள காற்று மாசு. கொரோனா காலக்கட்டத்தில், ஊரடங்குகள் காரணமாக காற்று மாசு குறைந்திருந்தது. அதன் பின் கொரோனா தொற்று படிப்படியாக குறைய, தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல காரணங்களுக்காக மீண்டும் காற்று மாசின் வீரியம் தலைத்தூக்கத் தொடங்கியது. காற்று மாசால் மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாவதால், அதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், அத்தியாவசியம் இல்லாத சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும், கட்டுமானப் பணிகள், கட்டிடங்களை இடிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிக்க குறிப்பிட்ட காலத்திற்கு தடை, அரசு, தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது.
இந்த காற்று மாசால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல முறைகளை டெல்லி அரசு கையாண்டு கொண்டுதான் வருகிறது. பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் காற்று மாசின் வீரியம் குறையவில்லை. இந்நிலையில், நேற்றை விட காற்று தரக் குறியீட்டு எண் தற்போது வெகுவாக உயர்ந்து 232 ஆக பதிவாகியுள்ளது.
இந்த காற்றின் தரக்குறியீடு 6 வகைகளாக பிரிக்கப்படுகிறது. 50 அல்லது 50-க்கும் கீழ் இருந்தால் நல்லது, 50 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரமானது, 101 முதல் 200 வரை இருந்தால் மிதமானதாக கருதப்படும். மேலும், 201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக கருதப்படும், மேலும், 301 முதல் 400 வரை மிக மோசமானதாகவும், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையானதாகவும், மக்கள் வாழ தகுதியில்லாத நிலையிலும் காற்று மாசு இருப்பதாகவுன் கருதப்படும்.
இதில் 301-க்கும் மேல் டெல்லி காற்றின் தரக் குறியீட்டு எண் சென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காற்றின் தரம் மோசமாக உள்ள நிலையில் மக்கள் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படகூடும் என டெல்லி அரசு கவலை தெரிவித்துள்ளது.








