அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 22…

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 22 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 70 நிமிடங்களுக்குள் நடந்த முடிந்த இந்த சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேருக்கு தண்டனை விவரங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.பாட்டீல் இன்று அறிவித்தார். 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி, மீதமுள்ள 11 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

வழக்கு விவரம்

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடந்தது இந்த சம்பவத்தில் தான்.தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெடிக்காத 29 குண்டுகள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 79 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

2002 குஜராத் கலவரத்தின் பழிவாங்கும் செயல் இது என்றும் தெரிவித்தது.
அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த 8ம் தேதி சிமி அமைப்பின் முன்னாள் தலைவர் சப்தர் நகோரி உட்பட 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 28 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 27 பேர் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்கள். ஒருவர் ஸ்கிசோஃப்ரினியா நோயால் பாதிக்கப்பட்டதால் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டை அளிக்கப்பட்டது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.