முகம்மது நபி குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா உள்ளிட்ட மூவர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபி குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக புகார் எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், பாஜக டெல்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பாஜகவில் இருந்து நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். நவீன் ஜிண்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல்களும், பாலியல் அச்சுறுத்தல்களும் வந்ததை அடுத்து, அவருக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
இந்நிலையில் நுபுர் ஷர்மா மற்றும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டவர்கள், எதிர் தாக்குதல் நடத்தியவர்கள் என பலர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால், பத்திரிகையாளர் சபா நக்வி, ஷதாப் சவுகான், மெளலானா முஃப்தி நதீம், அப்துர் ரகுமான், குல்சர் அன்சாரி, அனில் குமார் மீனா ஆகியோருக்கு எதிராக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் IFSO பிரிவு சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி துணை ஆணையர் கே.பி.எஸ். மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டும் என்றே தவறான தகவல்கள் பரப்பப்படுவதில் சமூக ஊடகங்களுக்கு உள்ள பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.