சென்னை ராயபுரத்தில் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட ஒரே வாகனத்தில் வந்த முதல்வர்கள் வந்தனர்.
அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். புதுமைப்பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்விற்கு பிறகு சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட மு.க.ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரே வாகனத்தில் வந்தனர். அப்போது தேசிய மாணவர் படையினர் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை அளித்தனர்.
இதன் பின்னர் அண்ணா நூற்றாண்டு நூலக வருகை பதிவேட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கையெழுத்திட்டார். பின்னர் மாதிரி பள்ளிகளில் நடத்தப்படும் பாட முறையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டனர். நூலகத்தின் முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு, ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை பாடப்பிரிவு, ஏழாம் தளத்தில் ஓலைச் சுவடி பிரிவு, ஆகிய பிரிவுகளை நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து எட்டாம் தளத்தில் கலைஞர் நினைவு நூலகம் சார்ந்த குறும்படம் மற்றும் இல்லம் தேடி கல்வி குறித்த குறும்படம் பார்த்துவிட்டு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் அன்பில் மகேஷ்,மா சுப்பிரமணியன்,சேகர் பாபு, பொன்முடி,நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ் குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்பு.







