டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.
இதனையடுத்து கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தியது. புதிய கலால் கொள்கை குறித்து ஆலோசிக்க அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு பிபவ் குமார் சென்று இருந்தாரா என்று அமலாக்கத்துறை கேள்வி எழுப்பி இருந்ததாக தகவல் வெளியாகின
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ அனுப்பிய என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

”அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நான் பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். உங்கள் அரசாங்கம் தலை முதல் கால் வரை ஊழலில் திளைத்துள்ளது. சிபிஐ ன் இந்த சம்மனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் ஒருபோதும் நின்று விடாது. ஏப்ரல் 16ம் தேதி ஆஜராகும்படி சிபிஐ அனுப்பிய சம்மனால் அவரது குரலை நசுக்க முடியாது” என சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.







