நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  லியோ திரைப்படம்…

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

லியோ திரைப்படம் வெளியான போது,  நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இந்த கருத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.  ஆனால், தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி நடிகை த்ரிஷா,  நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி,  நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.  தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன்,  ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் த்ரிஷா,  குஷ்பு ஆகியோர் தமிழ்நாட்டில்
இருக்கும் நிலையில்,  சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு
எதிராக வழக்குத்தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும்,  ஆனால் வழக்கு
அபராதத்துடன்,  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அபராத உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்,  வழக்கை தொடர
விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.