சீனாவின் கருவுறுதல் விகிதம் 2022ஆம் ஆண்டில் 1.09 ஆகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை தடாலடியாக குறைந்து வருவதால், வரும் ஆண்டுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக தற்போது சீனா உள்ளது. ஆனால் அந்த நாட்டில் மிகவேகமாக குறைந்து வரும் மக்கள்தொகை காரணமாக, தற்போது அதிகளவு வயதான பணியாளர்கள் உள்ளனர். இதன் காரணமாக 2016 -ம் ஆண்டில் நாட்டின் கடுமையான “ஒரு குழந்தை கொள்கையை” சீன அரசு தளர்த்தியது. மேலும், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.
அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவல்களின்படி, 2021 மற்றும் 2025 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் மக்கள்தொகை பூஜ்ஜிய வளர்ச்சி அல்லது எதிர்மறையான வளர்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் கருவுறுதல் விகிதம் 2022ஆம் ஆண்டில் 1.09 ஆகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நேஷனல் பிசினஸ் டெய்லி தெரிவித்துள்ளது.
ஊக்கத்தொகை மற்றும் மேம்பட்ட குழந்தை பராமரிப்பு வசதிகள் உட்பட பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது. மக்கள்தொகை தரத்தை மேம்படுத்த கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக வகையில் ”கருவுறுதலை” பராமரிக்க முயற்சிப்பதாகவும் சீனா கூறியுள்ளது.
குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் செலவுகள் மற்றும் குறைந்து வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங்களால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளாமல் இல்லத்தரசிகள் கருவுறுதலை தள்ளி வைப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், குழந்தை இல்லாத பெண்களின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரு மடங்கிற்கும் மேலாக கடந்த ஆண்டு 43.2% ஆக அதிகரித்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 2017 இல் ஒரு பெண்ணுக்கு சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1.3 ஆக இருந்து கடந்த ஆண்டு 0.9 ஆகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.







