மேகதாது திட்டத்துக்கு அனுமதி கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதா அரங்கில் கர்நாடகா மாநில அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் சித்தராமையா, காவிரி நதிநீர் வழக்கில் சட்டப்போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தந்துள்ளதாக கூறினார். ஒருமித்த கருத்துடன் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பு வாதத்தை முன் வைப்போம் என்றார்.
தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை வழங்க மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க கர்நாடக அனைத்துக்கட்சி குழுவை டெல்லி அழைத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.







