விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் குழந்தை உயிர்யிழந்ததை அடுத்து உறவினர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பாரதி நகரைச் சார்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40).
இவருடைய மனைவி முத்துமாரி (வயது 30). முத்துமாரியின் பிரசவத்திற்காக கடந்த
புதன்கிழமை காலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும், நேற்று முன்தினம் முத்துமாரிக்கு அதிகாலை பெண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் இறந்து பிறந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை தொடர்ந்து இறந்த குழந்தையின் உடலை பெற்ற உறவினர்கள் இறுதிச் சடங்கை முடித்த நிலையில் , குழந்தை பிறந்ததிலிருந்து தாய் முத்துமாரியை உறவினர்கள் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துமாரியை பார்க்க மாலை வரை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் அனுமதிக்காத நிலையில் தொடர்ந்து குடும்பத்தினர் பிரச்சனையில் ஈடுபட்டனர்.
பின்னர் முத்துமாரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமாரியின் உறவினர்கள் அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேறு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் வரவேண்டும் என கூறி கோரிக்கை வைத்தனர்.
முத்துமாரியின் இறப்பிற்கான உரிய காரணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று, உடற்கூறு ஆய்வு செய்வதற்கு வேறு மாவட்டத்திலிருந்து மருத்துவர்கள் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இரண்டாவது நாளாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது . அதை தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி இறந்த முத்துமாரியின் உடலை வருவாய்த்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து கொண்டனர்.