ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போராடிய தமிழகத்தின் வீரமிகு பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய இவர் 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 227 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் அன்னாரின் நினைவைப் போற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் பிறந்து, பாரதத்தின் விடுதலை வேட்கைக்கு முன்னோடியாகத் திகழ்ந்த மாமன்னரும், தமிழர்களின் வீரத்தைத் தலைமுறைகள் கடந்தும் பறைசாற்றும் சுதந்திரப் போராட்ட வீரருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினம் இன்று.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சாமலும், அடக்குமுறைக்கு அடிபணியாமலும், மண்ணின் உரிமைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் துணிந்து நின்ற மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




