ஐபிஎல் போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்ற வார்னர் ஹைதராபாத் அணியைப் பழிதீர்த்தார்.
ஐபிஎல்-இல் நேற்று நடைபெற்ற டெல்லி – ஹைதராபாத் இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக முட்டிமோதிக் கொண்டிருக்க, அதையெல்லாம் தாண்டி அதிகம் கவனிக்கப்பட்டது டெல்லி அணியின் வார்னர் இன்னிங்ஸ்.
கடந்த காலங்களில் வார்னர் ஹைதராபாத் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டமும் பெற்றுக் கொடுத்தார். ஆனால், கடந்த சீசனில் வார்னருக்கு வாய்ப்பு கொடுக்காமல் டக் அவுட்டிலேயே அமரவைத்தனர்.
அவரிடம் இருந்த கேப்டன் பதவி கேன் வில்லியம்சனிடம் கொடுத்தார்கள். ஹைதராபாத் அணியின் வரலாற்றில் அந்த அணிக்காக அதிக ரன் எடுத்தது வார்னர்தான். ஆனால், மெகா ஏலத்தின்போது வார்னரை ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொள்ளவில்லை. இது அனைத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது வார்னரின் இன்னிங்ஸ்.
நேற்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனராக களம் இறங்கிய வார்னர் சிறப்பான ஆட்டத்தை ஆடி 92 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி 186 ரன் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் எல்லோருமே வார்னரின் சதத்தை எதிர்பார்த்த நிலையில், வார்னர் சதம் அடிக்காதது பெரும் விவாதப் பொருளாக மாறியது.
எட்டு ரன்கள் எடுத்தால் வார்னர் சதம் அடித்துவிடுவார் என்ற நிலையில், சிங்கிள் எடுத்து ரோமன் பவுல், வார்னருக்கு வாய்ப்பு கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஆட்டம் வேறு மாதிரியாக இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ரோமன் பவுல் பேசுகையில், நான் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சிங்கிள் எடுக்காதே. கிரிக்கெட்டை அப்படி ஆடக் கூடாது. சிக்ஸர்களாக அடி என கடைசி ஓவருக்கு முன் வார்னர் என்னிடம் கூறினார் என்றார்.
வார்னரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வார்னரின் சதம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போட்டியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்துக்கு இறங்கியது. டெல்லி அணி 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்னரை தக்கவைக்காமல் பெரும் தவறிழைத்துவிட்டார்கள் என ஹைதராபாத் அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.








