கிராமிய நாடக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழ் மாநில திரைப்பட கிராமிய நடன கலைஞர்கள் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் கோவில் திருவிழாக்கள் நடத்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமிய மேடை நடன கலைகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளதால், மேடை நடன கலைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேடை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் மேடை நடன கலை நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி வழங்கிட வேண்டும், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மேடை நடன கலைஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் சமத்துவபுர வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் மற்றும், 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியமாக 5 ஆயிரம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நடன கலைஞர்கள் எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நடன கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் கலந்துகொண்டனர் .







