கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு பால் உற்பத்தி முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சபர்காந்தா பகுதியில் உள்ள குஜராத்தின் பால் உற்பத்தி கூட்டறவு சங்கமான சபர் டையரியின் விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத்தில் பால் உற்பத்தி மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது இதன் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பால் உற்பத்தி மிக முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்த பிரதமர், பால் உற்பத்தி மேலும் வளர்ச்சி பெற தேவையான உதவிகளை அரசு விவசாயிகளுக்கு செய்யும் என்றார்.
பெண்கள் தலைமையில் இந்தியா வளர்ச்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் தாக்கம் பால் உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் என்றார்.
நாட்டில் 10 ஆயிரம் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறிய பிரதமர், இதன் மூலம், சிறு விவசாயிகளும் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.
விவசாயிகளின் வருவாயை உயர்த்த மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கிராமப்புற சிறு விசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருவதை பார்க்க முடிவதாகக் குறிப்பிட்டார்.
பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பதன் காரணமாக விவசாயிகள் பயன் அடைந்து வருவதாகத் தெரிவித்த அவர், 2014க்கு முன்பு 40 கோடி லிட்டர் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டு வந்ததாகவும், அது தற்போது 400 லிட்டராக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 3 கோடிக்கும் அதிகமாக கடன் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், கதர் பொருட்கள் விற்பனைக்கான முயற்சிகளும் நல்ல பலன்களை அளித்து வருவதாகத் தெரிவித்தார்.









