பிரதமர் மோடியை வரவேற்க கோயில்களில் சாமி புறப்பாட்டிற்கு முன்பாக ஆடும் மல்லாரி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. அதிலும் கூடுதல் சிறப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீஸர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடக்கி வைப்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, தமிழ்நாடு பாஜகவின் மாநில கலை மற்றும் கலாச்சாரம் பிரிவினர் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர். ஆடி மாதம் என்பதால் அதனை மையமாகக் கொண்டு தமிழ்நாடு சிறு தெய்வங்கள் சிலை கொண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நடனமாட நாதஸ்வரம் இசைக்கப்பட உள்ளது. பிரதமரை வரவேற்க கோயில்களில் சாமி புறப்பாட்டிற்கு முன்பாக ஆடும் மல்லாரி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அய்யனார், மதுரைவீரன், அம்மன், சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.








