தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல் – சங்கரி தம்பதியினர் மகன் மாரீஸ்வரன், இந்திய ஹாக்கி அணியில் ஆசிய கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ளார்.
இந்தோனேசியாவில், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணிக்காக தமிழ்நாட்டில் இருந்து கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் மற்றும் அரியலூரை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் தேர்வாங்கியுள்ளனர். இதில் மாரீஸ்வரன் தூத்துக்குடி மாவட்டம் ஹாக்கி விளையாட்டிற்கு பெயர்போன ஹாக்கிபட்டி என்றழைக்கப்படும் கோவில்பட்டியை சேர்ந்தவர். மாரீஸ்வரன் தந்தை சக்திவேல் அவரது தாயார் சங்கரி ஆகிய இருவரும் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தினக் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சக்திவேல் – சங்கரி தம்பதியினர் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி கிடைக்கும் அன்றாட ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் சிறிய அளவிலான சிமெண்ட் ஓடு வீட்டில் வசித்து வருகின்றனர். மாரீஸ்வரன் ஹாக்கி போட்டிகள் மூலம் பெற்ற பரிசு பொருட்கள் வீடெங்கும் காணப்படுகிறது. மாரீஸ்வரன் சிறு வயது முதலே ஹாக்கி மீது தீராத காதல் கொண்டு ஹாக்கி விளையாட ஆரம்பித்துள்ளார். சொற்ப வருமானம் ஆக இருந்தாலும் மகனின் ஆசையை நிறைவேற்ற பெற்றோர்கள் முடிவு செய்து, தங்களால் இயன்ற அளவிற்கு ஹாக்கி விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து ஊக்கமூட்டி உள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘‘பிராண்டிங் செய்யாதது மிகப்பெரிய தவறு’ – அமைச்சர் மனோ தங்கராஜ்’
தினக் கூலி தொழிலாளர்களான மாரீஸ்வரன் பெற்றோர். கேட்பதை அனைத்தையும் வாங்கிக் கொடுக்க இயலாவிட்டாலும் தங்களால் இயன்றதை வாங்கிக்கொடுத்து மகனின் விளையாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட மாரீஸ்வரன் தேர்வாகி உள்ளது தங்களுக்கு மன நிறைவை தந்துள்ளதாகவும் அவனது கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பெற்றார் ஒலிம்பிக் போட்டியின் இந்திய அணிக்காக தங்களது மகன் மாரீஸ்வரன் விளையாட வேண்டும் என்பதே தங்களது கனவு என்று தெரிவிக்கின்றனர்.
இந்திய அணிக்காக தேர்வாகி இருக்கும் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி இருவருமே முத்துக்குமார் இடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக தேர்வாகிய வீரர்கள் என்றும் அவர்கள் தேர்வாகி இருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைத் தந்து இருப்பதோடு கோவில்பட்டியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றார் ஊர் மக்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









