அதிதீவிரமடைந்துள்ள மாண்டஸ் புயல் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நகர்ந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே, மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும், மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.