நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இணைய வழியாக இன்று நடைபெற்றது. அதில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது குறித்து விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சோனியா, சமீப நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் தொந்தரவை ஏற்படுத்துவதாகவும், அதனை பார்க்கும்போது நாட்டின் பாதுகாப்பில் முற்றிலும் சமரசம் செய்துள்ளது போல தோன்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.
ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசியங்கள் வெளியானது தேச துரோகம் என குற்றம்சாட்டிய அவர், அரசு தரப்பு இதுவரை மவுனம் காத்து வருவதாகவும், காது கேட்காதது போல இருப்பதாகவும் விமர்சனம் செய்தார். தேசபக்தி, தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நபர்களின் நிலைப்பாடு இப்போது வெளிப்பட்டுவிட்டது என்றார். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, பார்க் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்தோ தேசகுப்தாவுடன் மேற்கொண்ட வாட்ஸ் ஆப் உரையாடல் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பாலக்கோடு தாக்குதல் குறித்து மூன்று நாட்கள் முன்கூட்டியே அர்னாப் கோஸ்வாமி பகிர்ந்து இருந்தார்.







