கடலூர் : நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் வெடி விபத்து – பெண் தொழிலாளி உயிரிழப்பு!

கடலூரில் உள்ள நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கூடம் பெரியகுமட்டி கிராமத்தில் உள்ளது. இந்த வெடி தயாரிப்பு கூடத்தில் பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த லதா (37) என்பவர் இன்று(ஜூன்.15) வெடி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

வழக்கமாக 10 பேர் வரை வேலை செய்யும் இந்த வெடிமருந்து கூடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லதா மட்டுமே பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரிப்பு கூடத்தில் நாட்டுவெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த வெடிமருந்து கூடம் இடிந்து சுக்கு நூறானது.

இந்த சம்பவத்தில் தொழிலாளி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் உள்ளிட்டோர் சம்பவ கிராமத்திற்கு வந்து வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த லாதாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4  இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.