சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சி.ஆர்.பி.எப். என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கம் காவல் ஆயுதப் படைகளிலேயே பெரிய படையாகும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
இந்த நிலையில், சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், சிஆர்பிஎப் காவலர்களுக்கான ஆட்சேர்கைக்கான அறிவிப்பில், கணினித் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
https://twitter.com/CMOTamilnadu/status/1644959856850513922
சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, மொத்தமுள்ள 9,212 காலிப்பணி இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிபோர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பானது இத்தேர்வை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசு பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.
எனவே, இதில் மாநில இளைஞர்களும் சிஆர்பிஎப்-இல் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இக்கணிணி தேர்வை நடத்துவதற்கு ஏதுவாக அறிவிக்கையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.







