கிளப் போட்டிகளில் மொத்தமாக 500 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் மற்றும் அல் வெஹ்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ரொனால்டோ நான்கு கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 21-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த முதல் கோலே அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதன் மூலம் கிளப் ஆட்டத்தில் 500 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அண்மைச் செய்தி: சதமடித்த ரோஹித் சர்மா: புதிய சாதனை படைத்து அசத்தல்
இந்த ஆட்டத்தின் 40 நிமிடத்தில் இரண்டாவது கோலை கோல் கீப்பரின் கால்களுக்கு இடையே ரொனால்டோ அடித்தார். மூன்றாவது கோலை 53வது நிமிடத்திலும் நான்காவது கோலை 61 நிமிடத்திலும் ரொனால்டோ அடித்ததன் மூலம் அல்நாசர் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
கிளப் போட்டிகளில் ரொனால்டோ இதுவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும் அடித்துள்ளார். ஜூவென்ட்ஸ் அணிக்காக 81 கோல்களும் அல்நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார்.







