தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு தங்க நாணயம், நிலம், வாஷிங் மிஷின் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டதால், மக்கள் முகாம்களுக்கு படையெடுத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு ஆறு வகையான மளிகை பொருட்களை நகராட்சி நிர்வாகம் வழங்கியது. மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பிரிட்ஜ், வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் பவானியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேருக்கு குலுக்கல் முறையில் 2 சென்ட் வீட்டு மனை மற்றும் தங்க நாணயங்கள் பரிசு வழங்கப்படும் என வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் அறிவித்தார். மேலும் 4 பேருக்கு 2 கிராம் தங்க நாணயம் மற்றும் வெள்ளி விளக்கு, பட்டு வேஷ்டி, பட்டு சேலை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு படையெடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டு ஊராட்சியில் நடைபெற்ற மொக தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆயிரத்து 500 பேருக்கு பரிசாக குடம் வழங்கப்பட்டது.








