முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவைத் தடுக்க 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

கொரோனா பரவலைத் தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்துகொண்டிருந்தது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனை தடுக்க ஊரடங்கு,  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட  நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. உலக நாடுகளும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு பல இடங்களில் நிலவி வருகிறது.

இதற்காக வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்கள், செறிவூட்டும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ரெம்டெசிவிர் மருந்துக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும் காண முடிகிறது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், 2வது அலை என்பது எதிர்பாராத நிகழ்வு” என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா பரவலை தடுக்க கடந்த 14 மாதங்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினர். கொரோனாவை தடுக்க நிபுணர்கள் ஆலோசனைகளைப் பெற்று, திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா பேரிடரின் போது, அந்த சமயத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கக் கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு!

Niruban Chakkaaravarthi

சென்னையை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி

Halley karthi

நூறை கடந்த கருப்பு பூஞ்சை நோயாளிகள்!