சென்னை தனியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்து வருபவர்கள் பாரதி, சுந்தர், சிபி , மோனிகா, பவதாரணி, ஸ்டீபன், காட்வின், கிரிஷ், பாலாஜி , கவின் ஹரி, தவ்பிக், ரமேஷ் ஆகியோர். இவர்கள் அனைவரும் இணைந்து பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். லால்குடி மணக்கால் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சுவரில் ஆசிரியர்கள் அனுமதியோடு, பெண் கல்வியை அடிப்படையாக கொண்டு சுவர் ஓவியம் வரைந்தனர்.
அதன்பிறகு லால்குடி அரசு மருத்துவமனை சுவரில் போஸ்டர்கள் அதிகம் ஒட்டி வருவதை தடுக்கும் விதமாகவும், கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை புரிந்த முன்கள பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அங்கு சுவர் ஓவியங்கள் வரைந்தனர். அதற்கு முன்பு வரை கிழிந்த போஸ்டர்கள், கிறுக்கல்கள்களாக அழகிழந்து காணப்பட்ட சுவர், ஓவியம் வரைந்த பிறகு அழகியலோடு காட்சி தருகிறது.
அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை சுவர்களிலும் கொரோனா தொற்று விழிப்புணர்வு தொடர்பாக ஓவியங்கள் வரைந்துள்ளனர். இவர்களின் ஓவியத்திற்கு அங்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. இவை அனைத்தையும் Kirukans என்ற Youtube பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுபற்றி குழுவை ஒருங்கிணைத்த பாரதி கூறுகையில், “முதலில் விளம்பரத்திற்காக ஓவியங்களை வரைந்துவந்தோம். ஓவியம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் என்ன என ஆரம்பித்ததுதான் பல இடங்களில் வரைந்து முடித்தோம். எங்களுடைய இந்த பயணத்தில் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிதியுதவி அளித்து உறுதுணையாக இருந்தனர். கலைகள் மூலம் சமூக மாற்றங்கள் கொண்டு வருவோம் (Let’s do art and let’s bring some changes)” என்றும் கூறினார்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்









