நண்பரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்த நாட்டு வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். எங்கே நடந்தது இந்த சம்பவம்..? கொலையின் பின்னணி என்ன? செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ராஜ். 27 வயது இளைஞரான இவர், லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அசோக் ராஜ் பாட்டியான பத்மினியுடன் வசித்து வந்த நிலையில், நவம்பர் 13 ஆம் தேதி அவர் சிதம்பரத்திலுள்ள நண்பர் திருமணத்திற்கு செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
ஆனால் அசோக் ராஜ் சென்று இரு தினங்களாகியும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பாட்டி பத்மினி அசோக் ராஜ் காணவில்லை எனக்கூறி சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அசோக் ராஜ், சம்பவத்தன்று சோழபுரத்திலுள்ள கீழத்தெருவிற்கு கடைசியாகச் சென்றது அப்பகுதி சிசிடிவி காட்சிகளில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கீழத்தெருவிற்குள் சென்ற அசோக் ராஜ் அங்கிருந்து மீண்டும் திரும்பவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், அந்த தெருவில் வசித்து வந்த அசோக் ராஜின் நண்பரான கேசவ மூர்த்தி என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். நாட்டு வைத்தியராக அப்பகுதியில் வலம் வந்த கேசவ மூர்த்தி, போலீசாரிடம் கூறிய பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு அதிகமானது.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், கேசவ மூர்த்தியிடம் தங்களுக்கே உரிய பாணியில் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக் ராஜை கொலை செய்து, தனது வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டதாக கேசவ மூர்த்தி ஒப்புக்கொண்டது போலீசாரை திகைப்பில் ஆழ்த்தியது.
உடனடியாக திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார், மோப்ப நாய் சோழாவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் கீழத்தெரு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அசோக் ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
அப்போது உடல் பாகங்கள் அழுகி, உருக்குலைந்து காணப்பட்டதால், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் வைத்தே, அசோக் ராஜின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் அவரது உடல் போலீசார் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே கேசவ மூர்த்தியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், அவருக்கு இருமுறை திருமணம் நடைபெற்று, மனைவிகள் 2 பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அத்துடன் தன்பால் ஈர்ப்பு கொண்டவரான கேசவ மூர்த்தி, அசோக் ராஜை அதற்காக இணங்க வைத்தபோது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின்னர் போலீசாருக்கு அஞ்சி, அசோக் ராஜின் உடலை தனது வீட்டிலேயே புதைத்துவிட்டதாகவும் கேசவ மூர்த்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பின்னர் போலீசார் கேசவ மூர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, சோழபுரத்தைச் சேர்ந்த அனாஸ் என்பவர் காணாமல் போனதாக, 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. காணாமல் போன அனாஸ் கேசவ மூர்த்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என்பது தெரியவந்துள்ளதால், அவரையும் கேசவ மூர்த்தி கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனடிப்படையில் அது தொடர்பாகவும் கேசவ மூர்த்தியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







