முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அளித்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஊழல் புகார்களுக்கு உள்ளான முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாகவும், ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்குவதற்காக விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எழுந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நடைபெற்ற சோதனையில் 25.லட்சத்து 56ஆயிரம் ரூபாய், மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், விசாரணைக்காக செப்டம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராகும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. எனினும் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படி, விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். இந்நிலையில், எம்.ஆர். விஜபாஸ்கருக்கு நேற்று மீண்டும் சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்பு போலீசார், வரும் 25ம் தேதி, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.