“மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறோம்” – பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பின் அதிபர் அனுர குமார திசநாயகே பேச்சு!

“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, 3…

“We want to find a solution to the fishermen's problem” - President Anura Kumara Dissanayake's speech after meeting with Prime Minister Modi!

“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, 3 நாள் அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். தொடர்ந்து இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே சந்திப்பு நடைபெற்றது. அப்போது இரு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குறிப்பாக இந்தியா, இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும் மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு வருகை தந்தார்.

அனுர குமார திசநாயகே உடனான சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி பேசியதாவது;

“இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவின் இந்திய பயணத்தால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சாரம் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு வலுப்படும். காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும்.

இலங்கையில் பால்வளம் மற்றும் மீன்வள துறைகளின் வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். நேரடியான இணைப்பு, டிஜிட்டல் இணைப்பு மற்றும் ஆற்றல் இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளோம். மின் இணைப்பு, பெட்ரோலிய குழாய் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு அனுர குமார திசநாயகே பேசியதாவது;

இலங்கை அதிபரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதோடு, இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இலங்கை நிதி நெருக்கடியில் இருந்த போது இந்தியா உதவி செய்தது மிகப்பெரும் விஷயம். மக்களின் நலனுக்கான பாடுபட இலங்கை மக்கள் எங்களை தேர்வு செய்துள்ளார்கள்.

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம். கடல் வளம் காக்க சுருக்குமடி வலை பயன்படுத்துவதை மீனவர்கள் கைவிட வேண்டும். சுருக்குமடிவலை பயன்படுத்துவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், ஆகவே சுருக்குமடிவலை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது எனவும் இலங்கை அதிபர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.