தலைமை நீதிபதி பதவி விலகக்கோரி சர்ச்சை கருத்து : கேரளா காங்கிரஸ் கமிட்டி மீது உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு!

தலைமை நீதிபதி பதவி விலகக் கோரி சர்ச்சை கருத்து பதிவிட்ட கேரளா காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதவி விலகக் கோரி கருத்து பதிவிட்ட கேரள காங்கிரஸ் கமிட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ரிட் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், அக்டோபர் 12ம் தேதி அன்று கேரளா காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “அன்புள்ள சூர்ய காந்த், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு இல்லை என்றால், இப்போதே ராஜினாமா செய்யுங்கள், அதைச் சமாளிக்கக்கூடிய ஒரு மாற்று நபரை நாங்கள் கண்டுபிடிப்போம்” என கூறப்பட்டிருந்தது. அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அந்தப் பதிவு, அனுமதிக்கப்பட்ட அரசியல் விமர்சனத்தின் வரம்புகளுக்குள் அடங்குகிறதா அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குற்றவியல் சட்டத்தின் கீழ் பரிசீலனைக்குரியதா என்பது குறித்த கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்ட மொழி, நீதித்துறையின் தலைவரை இழிவுபடுத்துவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

எனவே இந்த விவகாரத்தில் கேரளா காங்கிரஸ் கமிட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது உச்ச நீதிமன்றம் ரிட் வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 12ம் தேதி உச்ச நீதிமன்ற வளாகத்தில் அனுமதியின்றி பேரணியாக வந்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்ட கேரளா காங்கிரஸ் கமிட்டிக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.