மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஜூன் 2 அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் நடந்த ஒரு பெரும் கொலை பற்றியும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் தனக்கு தெரியும் என்று கூறி இருந்தார்.
மேலும் அவர் அக்கொலை தொடர்பான விவரங்களை வெளியிட மாட்டேன் என்றும் அவ்வாறு செய்வது அண்டை நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் வழக்கறிஞர் ரிங்கி சென் சாட்டர்ஜி எனபவர் மம்தா பானட்ஜிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கள் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மம்தா பானர்ஜி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
உஸ்மான் பின் ஹாடி கொலை
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மாணவத்தலைவரான உஸ்மான் பின் ஹாடி என்பவர் கொல்லப்பட்டார். இவரது மரணம் வங்கதேசம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹாடியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். தொடர்ந்து மேற்கு வங்கம் சென்ற அவர்கள் அம்மாநிலத்தின் சிறப்பு அதிரடிப் படையால் (STF) கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பேச்சில் ஹார்டியின் கொலையை மறைமுகமாக குறிபிட்டதாக கூறப்படுகிறது.





