ட்விட்டர் பயனாளர்கள் எத்தனை ட்விட்டுகளை பார்க்கலாம் என இனி ட்விட்டர் கட்டுப்படுத்தும் என்ற எலான் மஸ்கின் அதிரடியான அறிவிப்பு சமூக வலைதள பயன்பாட்டாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
உலகம் முழுதும் உள்ளோருடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள டுவிட்டர் வலைதளம் பெரிதும் பயன்படுகிறது. பல்வேறு துறை பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலகளவில் ஐந்தில் ஒருவருக்கு டுவிட்டர் கணக்கு உள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் முக்கிய தேர்வுகளில் ஒன்றான டுவிட்டர் தளம் அண்மையில் உலகம் முழுதும் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப பணிகள் சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ட்விட்டர் பயனாளர்கள் பலர் இடர்பாடு குறித்து புகார் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, டுவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளையும், பிற பயனர்கள் ஆயிரம் பதிவுகள், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தேவையற்ற தகவல்களை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
எலான் மஸ்க்-இன் இந்த அறிவிப்பு ட்விட்டர் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.







