பொங்கல் தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த…

பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பேருந்துகள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே ஆம்னி பேருந்துகளில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.

இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் உள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும். இக்குழுவினர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, ‘பர்மிட் சஸ்பெண்ட்’ போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.