கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றி விட்டு, ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ராணுவ ஆட்சிக்கு அதிருப்தியில் உள்ள துணை ராணுவப் படையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருதரப்புக்கு இடையிலான துப்பாக்கிச் சூடு, வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சூடான் தலைநகர் கர்த்தூமில் உள்ள சர்வதேச விமான நிலையம், அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளை துணை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்குக்கு இடையில் மோதல் அதிகரித்துள்ளது. தொடரும் துப்பாக்கிச் சத்தத்தினால், மக்கள் பீதியில் உள்ளனர். ஆனாலும் ‘நாட்டைக் காப்போம்’ என்று ராணுவம் சொல்கிறது.
ராணுவ முன்னாள் அதிகாரிகள் சிலர் இருந்தரப்பிற்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் எப்போது அமைதி திரும்பும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து, சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ‘’சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் தொடருவதால், மறு அறிவிப்பு வரும் வரை, அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும்.’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சூடானில் மோதல் ஏன்?
1956-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சூடான் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திரதுக்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்கிற பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் – அரசுக்கு இடையில் அமைதி ஒப்பந்தம ஏற்பட்டது. ஆனால், 1983-ல் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷரியா சட்டத்தை திணிக்க முயன்றதால், கிறிஸ்தவர்கள், அனிமிஸ்ட்ஸ் என்கிற மதத்தினரும் அதிகமிருந்த தெற்கு சூடானில், கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தின.
ஆனாலும், சூடானில், 1996-ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீரின் ஆட்சி மக்கள் போராட்டத்தால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் தற்போது வரை ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
குறிப்பாக 2003க்கு பிறகு, தற்போது வரை, 40 லட்சம் மக்கள் சூடானில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன அழிப்பும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்து, பசி, பட்டினி, சுகாதாரமான குடிநீர் இல்லாத நிலை ஒருபக்கம் தொடர்கிறது.
வேளாண் நிலங்கள் நிறைந்திருந்தாலும் தங்கச் சுரங்கங்கம், எண்ணெய் வளத்திற்கும் பஞ்சமில்லாத நாடாக சூடான் விளங்குகிறது. பருத்தி, நிலக்கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. அந்நாட்டு, ஏற்றுமதி வருவாயில் 73 % எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. ஆனாலும் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் ஒன்றாகவே இருக்கிறது. நிலையான அரசு அமையாதது, ஜனநாயக நிலைக்காதது. சிறு குழுக்கள், கிளிர்ச்சியாளர்கள், ஆதிக்கம் செலுத்தும் ராணுவம் உள்ளிட்டவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.








