தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலை… – இன்றும் ரூ.100க்கு விற்பதால் பொதுமக்கள் கவலை..!!

தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயாத்தின் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல்…

தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயாத்தின் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்வதே மிக மிக கடினம். தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை ஏறினால் பொதுமக்கள் மற்றும் ஓட்டல் தொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை அதிகரிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பது குறித்த கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், அது சாத்தியமா? நடைமுறைச் சிக்கல்கள் என்ன? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின்னர்  தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் “ தக்காளி விளைச்சல் குறைந்ததால் பத்து நாட்களுக்கு விலை அதிகரித்து காணப்படும் என்று கூறினார். மேலும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் நடவடிக்கையை அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். அதன்படி இன்று முதல் 82 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தபட்சம் 95 ரூபாய்க்கும் அதிகபட்சம் 98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதேபோல தக்காளியின் மொத்த விலையில் கோயம்பேடு சந்தையில் நேற்றை விட 5 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் சின்ன வெங்காயம் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று 50 ரூபாய் அதிகரித்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையில் 14 கிலோ அடங்கிய இன்றைய தக்காளியின் விலை ₹1350  மற்றும் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் முதல் ரகம் தக்காளி கிலோ 94 ரூபாய்  மற்றும் 15கிலோ கொண்ட கூடை 1400ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.