கர்நாடக மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ் கட்சி, 25 ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிக இடங்களில் வென்றுள்ளது.கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சாதித்தது எப்படி… இந்த வெற்றி தேசிய அரசியலில் எதிரொலிக்குமா அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கர்நாடக மாநிலம் மிகவும் முக்கியமான மாநிலம் ஆகும். பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கர்நாடகத்தில் இரண்டு முறை பாஜக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரசுக்கும் சோதனையான காலகட்டங்களில் கர்நாடகம் கைகொடுத்துள்ளது.1979 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிக்மகளூரிலும், 1999-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பெல்லாரியிலும், எம்.பியாக வென்ற பின் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்த வரலாறு மீண்டும் திரும்பும் என காங்கிரஸ் நம்புகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2018 ஆம் ஆண்டு, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதா வின் குமாரசாமியை முதலமைச்சராக்கி- கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் வழி நடத்தியது. ஓராண்டுக்கு பின் அக்கூட்டணி ஆட்சியை பாஜக கவிழ்த்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கட்சி தாவச்செய்து பாஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா பிறகு பசவராஜ் பொம்மை முதலமைச்சரானார்கள்.
மீட்சியை நோக்கி பயணீத்து வரும்.காங்கிரஸ் கட்சி, வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்,மத்தியில் மீண்டும்,ஆட்சி அமைக்க,இதர கட்சிகளுடன் கரம் கோர்த்து, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க வியூகம் வைத்து செயல்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாக ஒரு பெருவெற்றியை பெற காத்திருந்தது காங்கிரஸ்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் முன்பே அதற்கான பணியை ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப்பயணம் நடைபயணத்தின் போது, கர்நாடகத்தில் 21 நாட்கள் ,17 மாவட்டங்களில், 500 கிலோ மீட்டர் தீரம் பயணித்தார். கட்சி வேறுபாடின்றி மக்கள் ராகுல் காந்திக்கு உற்சாகமாக ஆதரவளித்தனர். அதுவே அமைதியான பிரச்சார களமாக இயல்பாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சி ,தேசிய தலைவர்களை பின்னுக்கு தள்ளி மாநில தலைவர்களை முன்னிறுத்தியது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள குழுக்களை அமைத்தது. மூத்த தலைவர்களை ஒற்றுமையாக, இணைந்து செயல்பட வைத்தது.அதே போல் தேர்தல் அறிக்கையிலும் மக்கள் அதிகம் பாதிக்கப்படும், அம்சங்களை இடம் பெற வைத்தது. பயனுள்ள இலவச திட்டங்களை அறிவித்து மக்கள் நம்பிக்கையை பெற்றது. வேட்பாளர்கள் தேர்வில் மிகவும் கவனமாக செயல்பட்டு,அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பளித்தது.
மற்றொருபுறம்,பாஜகவில் முதலமைச்சர், துணை முதலமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மண் சாவடி போன்ற லிங்காயத்து சமுதாய தலைவர்களை அரவணைத்து போட்டியிட வாய்ப்பளித்தது காங்கிரஸ். ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக அனைத்து சமுதாய தலைவர்கள், மடாதிபதிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
ஹிஜாப் விவகாரம், பாஜக வினர் அரசு ஒப்பந்தங்களில் 40 சதவீத கமிசன் வாங்கியதை மக்களிடம் கொண்டு சேர்த்தது,நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகம் என வெளிப்படையாக பேசியது மக்களை வெகுவாக கவர்ந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ச்சியை முன்னிறுத்தியே காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர்.பாஜகவின் தனிநபர் தாக்குதல் பிரச்சாரத்தையும் நேர்த்தியாகவே கையாண்டது காங்கிரஸ்
மல்லிகார்ஜுன கார்கே,அகில இந்திய தலைவரானதும், டெல்லியில் அமராமல் சொந்த மாநிலமான கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தினார். ராகுலின் வழிகாட்டுதலுடன் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமார் என்ற இருபெரும் தலைவர்களை இணைத்து, களப்பணியாற்ற ஊக்கமூட்டினார்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ் கட்சி. அத்துடன் 136 எம்.எல்.ஏக்களை பெற்று, 25 ஆண்டுகளுக்கு பின் லிங்காயத்து, ஒக்கலிகா, சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. காங்கிரசில் இந்த ஒற்றுமை நீடித்தால்,இதர கட்சிகளுடன் கைகோர்த்து, காங்கிரஸ் அடுத்து மத்தியிலும் ஆட்சியமைக்கும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் நம்பிக்கை ஒற்றுமை என்றும் பலமாம் என்று மாணவர்களிடம் ஆசிரியர்கள் கற்பித்தலை, மெய்ப்பித்து, காங்கிரஸை அரியணையில் அமர்த்தியுள்ளனர் கர்நாடக மக்கள்.