குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவை வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கும், நீட் விலக்கு, பல்கலைக்கழக சட்டங்கள் மேலும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 23.01.2023 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசியிருக்கிறார். இவர் ஆர்.எஸ்.எஸ். முகமாகவே செயல்பட்டு வருகிறார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமால் தடுக்கிறார். ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படும் இவர் திருந்துவதற்கு வாய்ப்பேதுமில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் பாசிச பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலாவது ஆளுரின் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.