அரசுப் பள்ளியில் கையில் கயிறு கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார் மாணவர் செல்வ சூர்யா (17). சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கும் இடையே கையில் சமுதாய ரீதியாக கயிறு கட்டுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மாணவர் செல்வசூர்யா பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அந்த மாணவரை மீட்டு இடைகால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவர் செல்வசூர்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சையில் இருந்த செல்வ சூர்யா (17) சனிக்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களின் இந்த மோதல் சம்பவத்தின்போது தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இதைப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காயமடைந்த மாணவருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
மாணவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இப்பிரச்னையில் ஈடுபட்ட பிளஸ் 1 மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவரின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலு்ம், அரசு வேலையும் வழங்க வேண்டும் என உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மாணவர் செல்வ சூர்யாவின் பிரேதப் பரிசோதனை தொடங்கியுள்ளது.
இச்சம்பவத்தின் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்ட பள்ளி நிர்வாகக் குழு பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.








