நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, திருச்சியில் அடுத்த மாதம் மாநாடு நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் என்ன செய்தாலும் அதை திருவிழா போன்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அரசியலிலும் தீவிரமாக இறங்கி செயல்பட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தனது பழைய பேட்டி ஒன்றில், தளபதி விஜய்யே கூறியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக, தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் நல பணிகளை அவ்வப்போது தன்னுடைய ரசிகர்கள் மூலமாக செய்து வருகிறார்.
இந்த நிலையில், அரசியலில் ஈடுபடும் தன்னுடைய முதல் முயற்சியாக, டாக்டர் அம்பேத்கரை, கையில் எடுத்த நடிகர் விஜய், சட்டமேதை அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளான்று, அவரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் அன்று நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், அந்தந்த ஊர்களில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் ஆதி திராவிடர், சிறுபான்மையினர் ஓட்டுகளை குறிவைத்து விஜய் ரசிகர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவியை கைப்பற்றினர். அதேபோல் லோக்சபா, சட்டசபை தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றிபெற்று அரசியலில் வேரூன்ற வேண்டும் எனக்கருதி, முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி, அரசியல் திருப்பு முனைகளுக்கு பெயர் பெற்ற திருச்சியில், அடுத்த மாதம் மாநாடு நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில், திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பாக ஆங்காங்கே சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர். அதில் திருச்சி என்றாலே திருப்பம் தான்..விரைவில் மாநாடு… காத்திருக்குது தமிழ்நாடு… வா தலைவா என்று விஜய்யை ரசிகர்கள் அழைக்கும் விதமாக இந்த விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே.ராஜா, முன்னாள் நிர்வாகிகள் மும்பை பவுல், பாரதிராஜா உள்ளிட்டோர் பெயரில் இந்த சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் என்று மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனாலும் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த அறிவிப்பை விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக ஏற்குமா? நிராகரிக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மதுரையிலும், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், ‘2024 பாராளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே’ என, குறிப்பிட்டு ‘விரைவில் மதுரையில் மாநாடு’ என அறிவித்துள்ளனர். இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே நடிகர்கள் விஜயகாந்த், கமல், சரத்குமார் உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்த வரலாறு உண்டு. அந்த வரிசையில் விஜய் கட்சி ஆரம்பிப்பது மட்டுமல்ல, ஆட்சியையும் பிடிப்பார். அதற்கு முன்னேற்பாடாகத்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். லோக்சபா தேர்தலுக்குள் கட்சி பெயர், சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அபப்டியொன்று நடந்தால் மதுரை மாநாட்டில் விஜய் கட்சியின் அறிவிப்பார் என, ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா











