ஆரோக்கியமான விமர்சனம் அவசியம் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர தலைநகர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மண்ணில் ஆரோக்கிமான விவாதமும், ஆரோக்கிமான விமர்சனமும் இருந்து வந்துள்ளது என குறிப்பிட்டார். இவை நமது சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என அவர் கூறினார். அந்த வகையில் ஆரோக்கியமான விவாதம் நமது பாரம்பரியத்தின் அங்கம் என அவர் தெரிவித்தார்.
மராட்டிய வீரர் வீர சிவாஜி குறித்தும் சம்பாஜி மகராஜ் குறித்தும் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் நமது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இன்றும் நாட்டுப்பற்றை ஊட்டி வருவதாகக் கூறினார்.
மகராஷ்ட்ர அரசியலில் நீண்ட காலமாக ஓரணியில் இருந்து வந்த பாஜகவும் சிவ சேனாவும் தற்போது எதிரெதிராக உள்ளன. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், இதனை நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதமர் மோடி பேசி இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.









