நடிகர் விஜய் மறைந்த இயக்குநர் சித்திக் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!

மறைந்த இயக்குநர் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை…

மறைந்த இயக்குநர் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற எங்கள் அண்ணா படத்தை இயக்கியது அவர் தான். குறிப்பாக நடிகர் விஜய் நடித்த பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்னைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்திக் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் சித்திக். இயக்குனர் சித்திக் உயிரிழந்த  சமயத்தில் வெளிநாட்டில் இருந்தார் நடிகர் விஜய். ‘லியோ’ஷூட்டிங் முடிந்த கையுடன் ஓய்வுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த விஜய்யால் சித்திக்கின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் மறைந்த இயக்குநர் சித்திக்கின் குடும்பத்தை தொடர்பு கொண்ட நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாததற்கும் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.